14 Jun 2026

தமிழ் இலக்கணம் - ஓர் எளிய அறிமுகம் Part - 1


தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் என்பது வெறும் எழுத்து வடிவங்களை ஒழுங்குபடுத்தும் கலை அன்று; அது ஒலியின் அறிவியலாகும். ஒலி என்ற அளவை கொண்டு  தொல்காப்பியத்தின் பாடல்களை பார்ப்போம்.  

தொல்காப்பியர் தொடங்கி, எல்லா இலக்கண நூலாசிரியர்களும் தமிழின் அடிப்படையாக 'எழுத்தை' வைத்தனர்.  ஆனால் 'எழுத்து' என்று அவர்கள் குறிப்பிட்டது வரி வடிவம் அல்ல. ஒலி வடிவம். .  இந்த நோக்கில் ஆராய்ந்தால் புணர்ச்சி, யாப்பு, அணி போன்ற இலக்கண விதிகள் எளிமையாக விளங்கும்.


எழுத்து : முதல் எழுத்து - சார்பேழுத்து 


எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே - 1

  
 
"எழுத்து"
என்று சொல்லப்படுபவை  'அ' என்ற எழுத்தில் தொடங்கி  'ன்' என்ற எழுத்தில் முடிய  முப்பது (30) எழுத்துகள் என்று சொல்லுவர். சார்ந்து வரும் முறையில்  வேறு மூன்று எழுத்துகளும் உண்டு. அவை சார்பேழுத்து.

சார்பெழுத்து  என்று மூன்று இருப்பதால் முதலில் கூறியது  முதல் எழுத்துகள். அவை மற்ற ஒலிக்கு மூலமாக அமைவதால்.    "அ' என்ற எழுத்தில் தொடங்கி  'ன்' என்ற எழுத்தில் முடிய  முப்பது (30) எழுத்துகள் -  முதல் எழுத்துகள். 

அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2



 சார்பெழுத்து  -"சார்ந்து" என்றால் — மற்றொன்றை அண்டி நிற்பது. ஒரு எழுத்தின் ஓலி அதன் மாத்திரையில் குறைந்து ஒலித்தல் எனலாம்.

 சார்பெழுத்து வகைகள்
தொல்காப்பியம் அதை 3 வகை என்கிறது. அவை குற்றியலுகரம் ,குற்றியலிகரம் ஆய்தம் (ஃ)
அதற்கு பின் வந்த பவணந்தி முனிவர் நன்னூலில் அதை 10 வகைப்படும் என்கிறார்.
இந்த சார்பெழுத்து இலக்கணத்தை அடுத்த பதிவில் விரிவாக  காண்போம். 
இதைப் புரிந்து கொண்டால் இலக்கண விதிகள் புரிவதற்கு எளிதாக இருக்கும்.  

அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப - 3                  ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ                                                  என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4



குற்றெழுத்து  = குறுகிய  ஒலி
 (குறில்)  
  அ, இ, உ, எ, ஒ  -இந்த ஐந்து எழுத்துகள்,  ஒரு மாத்திரை (  கண் இமைப்பதற்கு ஆகும் நேரம் ) ஒலிக்கப்படும்.
 
 நெட்டெழுத்து=   நீண்ட ஒலி - நெடில் 
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - இந்த ஏழு  எழுத்துகள்,  இரண்டு  மாத்திரை ஒலிக்கப்படும்.   


மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7




மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே: -
தமிழில் மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கப்படும் ஒற்றை எழுத்து எதுவும் கிடையாது.

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய கூட்டி "எழூஉதல்" என்மனார் புலவர். 
விதி விளக்கம்   -செய்யுளில் சில இடங்களில் உணர்ச்சி வெளிப்பாட்டிற்காக அல்லது ஓசை நயம் குறையாமல் இருக்க  ஒலியை நீட்ட விரும்பினால்  அந்த மாத்திரையுடைய (எழுத்துகளை)  சேர்த்து எழுதுதல்  என்று கூறுவர் புலவர்கள்.

இந்த விதியை விளக்கும் சொல்லிலேயே — அதே செயல்முறையை தொல்காப்பியர் காட்டுகிறார்.

"எழூஉதல்" -  வழக்கமான "எழுதுதல்"-இல் வரும் "ழு" = 1 மாத்திரை மட்டுமே (குறில் உ).
ஆனால் தொல்காப்பியர் அதை "ழூஉ" ஆக நீட்டுகிறார் — அதாவது 3 மாத்திரை அளவுக்கு!

  •  ழ் + (நெடில்) = 2 மாத்திரை
  • ( குறில்) = 1 மாத்திரை
  • மொத்தம் = 3 மாத்திரை

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. - கண் இமைக்கும் (மூடித்திறக்கும்) நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம்  ஒரு மாத்திரை என நுட்பமாக உணர்ந்த அறிஞர்கள் கண்ட முடிவு.  (ஆறு = வழி) 


பொழிப்புரை (சுருக்கம்)
  
  • எழுத்து = ஒலி வடிவம்
  • மாத்திரை அளவு: கண் இமைக்கும் / விரல் சொடுக்கும் நேரமே ஒரு மாத்திரை 

  • முதல் எழுத்து 30: 'அ' முதல் 'ன்' வரை முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள்; மற்ற ஒலிகளுக்கு இவையே மூலம்.  ( ஆங்கிலத்தில் 26 - இரண்டு எழுத்துக்களே அதிகம் )
  • சார்பெழுத்து =  மாத்திரை குறைந்து ஒலிப்பவை. தொல்காப்பியம் 3 வகை (குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்); நன்னூலில் பவணந்தி முனிவர் 10 வகைப்படும் என்கிறார். 


  • குற்றெழுத்து (குறில்) — 1 மாத்திரை: அ, இ, உ, எ, ஒ — ஐந்து எழுத்துகள், ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • நெட்டெழுத்து (நெடில்) — 2 மாத்திரை: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ — ஏழு எழுத்துகள், இரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • அளபெடை- மூன்று மாத்திரை எழுத்து இல்லை: நீட்ட வேண்டின் அதே  இணையெழுத்தை  சேர்த்து எழுதுவர் ("அளபெடை").

சார்பெழுத்தின் இலக்கணமும்  வகைகளும் அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்..
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி