சங்கம் வளர்த்த தமிழ்:
தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகிற்குப் பறைசாற்றுவதில் 'சங்கம்' என்ற சொல்லுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு புலவர்கள் ஒன்று கூடித் தமிழை ஆய்ந்து வளர்த்தார்கள். முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என முச்சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கான இலக்கியச் சான்றுகள் என்ன? அறிஞர்களின் கருத்து என்ன? என்பது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
இலக்கியக் குறிப்புகள்
i) இறையனார் அகப்பொருள் உரை
முச்சங்கங்கள் பற்றிய தகவல்களை நமக்குத் தரும் முதன்மையான நூல் கி.பி. 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை ('நக்கீரர் எழுதியதாகக் கருதப்படும் உரை) ஆகும்.
இந்நூலின்படி:
1. முதல் சங்கம்: தென்மதுரை.
4,440 ஆண்டுகள் நீடித்தது என்பர்
இதில் அகத்தியர், சிவபெருமான், முருகப்பெருமான் போன்றோரும் புலவர்களாக இருந்தனர் என்பர்.
பெரும்பரிபாடல் முதுநாரை களரியாவிரை போன்ற நூல்கள் இயற்றப்பட்டன
2. இடைச் சங்கம்: கபாடபுரம்.
3,700 ஆண்டுகள் நீடித்தது என்பர்
இதில் தொல்காப்பியர் வெள்ளூர்க்காப்பியனார் திரையன் மாறன் போன்ற புலவர்கள்இருந்தனர் என்பர்.
தொல்காப்பியம் பெருங்கலி இசை நுணுக்கம் மாபுராணம் வியாழமாலை
3. கடைச் சங்கம்:
இன்றைய மதுரை
1,850 ஆண்டுகள் நீடித்தது என்பர்
நக்கீரர், சிறுமேதாவியார், பெருங்குன்றனார் போன்ற புலவர்கள் பங்கேற்றனர்.
நெடுந்தொகை குறுந்தொகை நற்றிணை புறநானூறு பதிற்றுப்பத்து
ii) சிலப்பதிகாரம்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
பஃறுளி ஆறு மற்றும் பல அடுக்கு மலைகளைக் கொண்ட குமரி மலைப்பகுதியை வளைந்த கடல் கொண்டு (மூழ்கடித்து) அழித்தபோது அவற்றை இழந்த பாண்டியன் வடக்கே கங்கை நதியையும், இமயமலையையும் தனது எல்லையாகக் கொண்டு, ஆட்சி செய்த பாண்டிய மன்னன் நீடூழி வாழ்க எனப் புகழ்கிறது
இது தென்மதுரை கடலில் மூழ்கிய சீற்றத்தை குறிக்கும் என்று கொண்டு தென்மதுரை இருந்தது எனவும் அதில் பாண்டிய மன்னர்கள் புலவர்களை பேணி சங்கம் வளர்த்தார்கள் என்று அனுமானிக்கலாம்.
iii) சங்க இலக்கியங்களான புறநானூறு மற்றும் மதுரைக் காஞ்சியில் பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டித் தமிழ் வளர்த்த 'கூடல்' பற்றிய குறிப்புகள் உள்ளன. ( கூடல் = சங்கம் )
இவை உண்மையா அல்லது புனைவா?
வரலாற்று ஆய்வாளர்களின்படி, முச்சங்கம் என்பது முழுக்கப் புனைவும் அல்ல; முழுமையான வரலாறும் அல்ல. இதில் உண்மையும் புனைவும் கலந்திருக்கின்றன.
முச்சங்கம் என்ற ஒன்று இல்லை - புனைவு எனக் கூறிய அறிஞர்கள்.
இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்பட்டுள்ள முச்சங்க வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஏற்க மறுத்த முக்கிய வரலாற்று அறிஞர்கள்:
i) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (K.A. Nilakanta Sastri): இவர் தென்னிந்திய வரலாற்றை எழுதிய முதன்மை ஆய்வாளர்.
அகப்பொருள் உரையில் கூறப்பட்டுள்ள காலக் கணக்குகள் (மொத்தம் 9,990 ஆண்டுகள்) மனித வரலாற்றிற்கு அப்பாற்பட்டவை. மேலும், கடவுள்களே நேரில் வந்து புலவர்களாக அமர்ந்து தமிழ் ஆய்ந்தார்கள் என்பது புராணத் தன்மையுடையது
இறையனார் அகப்பொருள் உரையில் உள்ள துல்லியமான ஆண்டுகள் மற்றும் பரம்பரை விவரங்களை "முழுக்க முழுக்கக் கற்பனை" என்றும், காலப் பொருத்தமற்றவை என்றும் நிராகரித்தார்.
ii) பி.டி. சீனிவாச ஐயங்கார் (P.T. Srinivasa Iyengar): இவரும் அந்த அதீத கால அளவுகளையும், கடல் கோளால் மூழ்கியதாகக் கூறப்படும் நிலப்பரப்பின் பரப்பளவையும் அறிவியல் ரீதியாக நம்ப முடியாது என்று வாதிட்டார்.
iii) கே.கே. பிள்ளை (K.K. Pillay): தமிழக வரலாற்றாசிரியரான இவர், சங்கங்கள் இருந்தன என்பதை ஏற்றாலும், இறையனார் உரையில் உள்ள மூன்று தனித்தனி சங்கங்கள் பற்றிய பிரம்மாண்ட கதைகளை நம்பகத்தன்மை அற்றவையாகவே கருதினார்.
சங்கம்' என்பது தமிழ்ச் சொல்லா? - தொல்காப்பிய விதி
"சங்கம்" என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல, அது வடமொழிச் சொல் என்ற ஒரு வலுவான மொழியியல் வாதம் உண்டு.இதற்கு ஆதாரமாகத் தமிழின் மிகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தின் ஒரு விதி சுட்டிக்காட்டப்படுகிறது. இதை மேலும் விவரமாக அடுத்த பதிவில் பாப்போம்.
முடிவுரை
கடைச் சங்க காலத்தில் உருவான 'எட்டுத்தொகை' மற்றும் 'பத்துப்பாட்டு' நூல்கள் இன்றும் நம்மிடம் உள்ளன. எனவே, பாண்டிய மன்னர்கள் புலவர்களை ஆதரித்து இலக்கியக் கூட்டங்களை நடத்தினார்கள் என்பதும், நூல்களைத் தொகுத்தார்கள் என்பதும் உண்மை.
புலவர்கள் என்றாலே புனைவு இருக்கும். ஆதலால் சங்கம் இருந்தது என்பது உண்மை ஆனால் எத்தனை ஆண்டுகள் எங்கு இருந்தது என்பது புனைவுடன் கலந்த உண்மையாக இருக்கலாம்.