08 Feb 2026

கல்லும் கடவுள்தான் கம்பன் பார்வையில்!

கம்பராமாயணம் - சுவருக்கு இப்படி உவமை கூற முடியுமா
 

ஒரு கவிஞனின் பார்வை சாதாரணக் கல்லையும் காவியமாக்கும். அதுவும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றால் கேட்கவா வேண்டும்? அயோத்தி மாநகரைச் சுற்றியிருந்த மதில் சுவரை அவர் வர்ணிக்கும் அழகே தனி! 

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்."


                                                                                 கம்பராமாயணம்

1. வேதத்தை போன்றது   "மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால் "

பொருள்:
வேதங்களின் பொருளை முழுமையாக உணர்ந்து முடிப்பது எப்படி அரிதோ, இந்த மதில் சுவரின் நீளம், அகலம், உயரம் மற்றும் அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிவது  சாத்தியமற்றது.
இந்த முடிவில்லாத தன்மையால், மதில் சுவர் வேதங்களுக்கு ஒப்பாகும்.


2. தேவர் உலகத்தை போன்றது  "விண் புகலால், தேவரும் ஒக்கும்"

பொருள்:இந்த மதில் சுவர் வான் அளவு  உயர்ந்து நிற்கிறது. அதன் உச்சி மேகங்களையும் தாண்டி விண்ணுலகைத் தொடுவது போல இருப்பதால், விண்ணில் வாழும் தேவர்களுக்கு இது ஒப்பாகும்.

புறநானூற்றில் - ஔவையார் -சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் கோட்டையை வர்ணிக்கிறார் 

விசும்பு தோய் மதில், பார் உடுத்தஅகழி
வெருவரு தானை.


                                                                       புறநானூறு, பாடல் 399 (ஔவையார் பாடியது)

விசும்பு தோய் மதில்: வானத்தைத் வானத்தை தொட்டுக் கொஞ்சி விளையாடும்  அளவுக்கு மிக உயர்ந்த அரண்.
வானத்தை முட்டி மோதும் சுவர் என்று சொல்லவில்லை. மேகங்கள் சூழும் அளவிற்கு உயர்ந்து நிற்பதால் - மேகங்கள் கொஞ்சி அணைத்து செல்கிறது -  விசும்பு தோய் - வானத்தை தோய்க்கும்  - தோய் என்ற வார்த்தை கவிநயம் மிக்கதாய் மிளிர்கிறது 


3. முனிவரை போன்றது
முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்
 

பொருள்: மதில் சுவரில் பொருத்தப்பட்டுள்ள வலிமையான இயந்திரங்கள் (பொறிகள்) எதிரிகள் வராதபோது அமைதியாக அடங்கி இருக்கின்றன. 

பொறி  - சிலேடை -  ஐம்பொறிகளை அடக்கிய முனிவரை போல் தன்னுள் பல போர் பொறிகளை அடக்கி வைத்துள்ளது.   ஓர் எயிலில்  ( கோட்டைச்சுவற்றில் ) எவ்வகை பொறிகள் இருக்கும் என்பதை அறிய சிலப்பதிகாரத்தில் ஒரு வர்ணனையை காண்போம் 

கடிமதில் வாயில் காவலிற் சிறந்து...
மிளைசூழ் போக்கின் வளைவிற் பொலிந்து...வளைவிற் பொறியும், கருவிரல் ஊகமும்,கல்லுமிழ் கவணும், கல்லிடு கூடையும்,
ஆண்டலை அடுப்பும், கவைக்கோல் புதையும்,
இருப்பு முள்ளும், எரிசிரல் பன்றியும்,
கழுமுள் போதையும், கதழ்எரிப் பிழம்பும்,
ஐயவித் துலாமும், கைபடு இரும்பும்.



மதுரையின் கோட்டை வாயில் மிகச் சிறந்த காவலுடன் இருந்தது.
வளைவிற் பொறி: தானாக வளைந்து அம்புகளை எய்யும் பொறி.
கருவிரல் ஊகம்: கரிய விரல்களை உடைய குரங்கு போன்ற பொறி (பகைவர்களைப் பிடிக்கும்).
கல்லுமிழ் கவண்: கற்களை வீசும் கவண் பொறி.
கல்லிடு கூடை: கற்களைக் கொட்டும் கூடைப் பொறி.
ஆண்டலை அடுப்பு: ஆண்டலைப் பறவையின் வடிவில் அமைக்கப்பட்ட, எரியும் பொருட்களைப் வீசப் பயன்படும் மதில் பொறி
இருப்பு முள், எரிசிரல் பன்றி: இரும்பு முட்கள், பன்றி வடிவ பொறிகள்.
கதழ்எரிப் பிழம்பும்: கொதிக்கும் நெருப்புக் குழம்பை ஊற்றும் பொறி.
ஐயவித் துலாம்: எடையுள்ள பொருட்களைத் தூக்கி வீசும் துலாக்கோல் பொறி


4. கற்பினை காக்கும் கன்னியரின் கவனத்தை போன்றது
 "காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்"

பொருள்: மான் போன்ற அச்சம், நாணம் உடைய கன்னிப்பெண் தன் கற்பையும், அழகையும் காப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பாளோ, அதேபோல அயோத்தி நகரத்தின் மதில் சுவர்கள் மக்களை காப்பதில் கவனம் கொண்டுள்ளது.

5. காளி தேவியை போன்றது
"சூலத்தால், காளியை ஒக்கும்"


பொருள்: மதில் சுவரின் உச்சியில் பகைவரைத் தடுக்கக் கூரிய சூலாயுதங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் இது சூலத்தை ஏந்திய காளி தேவிக்கு ஒப்பாகும்.

6.மதில்சுவர் கடவுளை போன்றது (ஈசன்)  
"யாவையும் ஒக்கும், பெருமையால் எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்""

பொருள்: உலகில் உள்ள மற்ற எல்லாச் சிறந்த பொருட்களின் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், இது எல்லாவற்றிற்கும் ஒப்பாகும்.  பகைவர்கள் இந்த மதிலை நெருங்கவோ, கடக்கவோ முடியாது. எப்படி இறைவனை (ஈசனை) அன்பால் அடைய முடியும் ஆனால் பகை (ஆணவம்) கொண்டு கடக்க முடியாது.  

இவ்வாறு, ஒரு சாதாரண மதில் சுவருக்குள் வேதத்தை, தேவர்களை, முனிவர்களை, கன்னியை, காளியை, ஏன் சாட்சாத் ஈசனையே உவமையாகக் காட்டும் அந்தப் பேருள்ளம், கம்பனால் மட்டுமே சாத்தியம்




ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி