அஃறிணை
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே.
உயர்திணை = உயர்ந்த திணை
யென்மனார் = என்பார்
மக்கட் சுட்டே = மக்களை குறிக்கும் சொல்லே
அஃறிணை = உயர் அல்லாத திணை
யென்மனார் = என்பார்
அவரல பிறவே = உயர் திணை அல்லாத பிற திணை
ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே = ஆக இரண்டு பிரிவாக வரும் சொற்கள்.
திணையின் பொருள்:
'திணை' என்ற சொல்லுக்கு ஒழுக்கம், பகுப்பு அல்லது பிரிவு என்று பொருள் கொள்ளலாம்.
உலகத்தை அடிப்படையாக "அறிவாற்றல் உடைய" மற்றும் "அறிவு அற்ற" என இரு வகையாகப் பிரிக்கலாம்.
அறிவின் வகைகள்:
அறிவு = அறிவது = தன்னை சுற்றி உள்ள உலகத்தை உணர்வது.
தொல்காப்பியர், அறிவையும் அதன் உணரும் தன்மையையும் தெளிவாக விளக்குகிறார்:
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; (உடலால் உணர்வது - தொடு உணர்வு)
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; (உடல் + நாக்கு - சுவை உணர்வு)
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; (உடல் + நாக்கு + மூக்கு - நாற்ற உணர்வு)
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; (உடல் + நாக்கு + மூக்கு + கண் - காட்சி உணர்வு)
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; (உடல் + நாக்கு + மூக்கு + கண் + காது - ஒலி உணர்வு) - இவை ஐம்பொறிகளால் பெறும் ஐம்புலன்கள்.
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (ஐந்தறிவு + பகுத்தறிவு = ஆறறிவு)
உயர்திணை:
தொல்காப்பியர், ஆறறிவு (பகுத்தறிவு) உடையவர்களை மட்டுமே 'உயர்திணை' என்று சுட்டுகிறார்.
அதாவது, சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன். பகுத்தறியும் திறன் இல்லாத ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிர்களும் உயர்திணைக்குள் அடங்காது.
அஃறிணை
பகுத்தறிவு உடையவர்களை உயர்திணை என்றும், அவ்வாறு பகுத்தறிய இயலாத உயிர்களையும் உயிரற்ற பொருட்களையும் தாழ்ந்த திணை என்றும் பிரித்திருக்க வேண்டும். ஆனால், தொல்காப்பியர் 'தாழ்ந்த திணை' என்று கூறாமல், 'உயர் அல்லாத திணை' என்று பகுத்துள்ளார்.
உயர் அல்லாத திணை = அல்லாத திணை = அல் திணை=அஃறிணை
'உயர் அல்லாத திணை' என்பதே மருவி, பின்னர் 'அல்லாத திணை' என்று ஆனது. பிறகு 'அல் திணை' என்று மாறி புணர்ச்சி விதிப்படி சேரும்போது 'அஃறிணை' என்று மாற்றம் பெற்றன. அஃறிணை என்பது உயர்திணை அல்லாத பிற அனைத்தையும் குறிக்கும்.
குழந்தை அழுதது ! ஏன் அஃறிணை
"மாவும் மாக்களும் ஐந்தறிவுடையன; மக்கள் தாமே ஆறறிவுடையர்"
என்ற வரிகள் இங்கு கவனிக்கத்தக்கது. ஆறறிவு என்பது பகுத்தறியும் திறனைக் குறிக்கிறது. பகுத்தறியும் திறன் இல்லாதவர்கள் மக்களாகக் கருதப்பட மாட்டார்கள், அவர்கள் 'மாக்கள்' (விலங்குகள் போன்றவர்கள்) என்றே குறிப்பிடப்படுவர்.
இதன் காரணமாகத்தான், பிறந்த குழந்தைக்கு பகுத்தறியும் திறன் இல்லாததால், "குழந்தை அழுதது" என்று அஃறிணையில் சுட்டுகிறோம்.
தொல்காப்பியத்தில் கிளவியாகம் பகுதியில் வரும் இந்த பாடல் ,வெறும் இலக்கண விதியாக மட்டுமல்லாமல், மனிதனின் அறிவாற்றல் மற்றும் பகுத்தறிவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஒரு தத்துவார்த்தப் பார்வையையும் உள்ளடக்கியுள்ளது.