24 May 2024

சூர்ப்பணகை - பாகம் -1

சூர்ப்பணகையின் - அறிமுகம்
 

இராமாயணத்தில்  சூர்ப்பணகையை  கொடியவளாக அல்லது எதிர் நாயகியாகவே பார்ப்பது உண்டு. சூர்ப்பணகையின் வரலாற்றைச் சுருக்கமாக காண்போம். சூர்ப்பணகையின் கணவன் பெயர் "வித்யுக்ஜிகவன்". இவன் காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர் இனத்தைச் சேர்ந்தவன்.  இராவணன் மூன்று உலகங்களையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் காலகேயர்களிடம் போர் தொடுத்தான்.  தன் தங்கையின் கணவன் என்றும் பாராமல்  வித்யுக்ஜிகவனை போரில் கொன்றான்.

சூர்ப்பணகை வேதனையில் ஆழ்ந்தாள். அவளை சமாதானம் செய்வதற்கு பஞ்சவடி என்ற காட்டை அவளுக்கு அரசாளக் கொடுத்து,  கரனையும் துணைக்கு அனுப்பினான்.  சூர்ப்பணகை தன் கணவனை கொன்ற ராவணனை தான் கொல்வதாக மனதிற்குள் சபதம்  எடுத்தாள். 

இராவணன் தவவலிமை பெற்றவன். அவனை கொல்வது எளிதல்ல என்றும் அவளுக்குத் தெரியும்.  ராவணனின் ஒரே பலவீனம் பெண்ணாசை. தனது தம்பியான குபேரனின் மகன் நளகுபேரனை மணக்க இருந்த ரம்பையை, மருமகள் என்றும் பாராமல் கவர்ந்து வந்தவன்தானே இந்த இராவணன் .

அதனால் - 
  1. இராவணனை தன்னால் அழிக்க முடியாது. 
  2. அவனை அழிப்பதற்கு ஒரு பலம் வாய்ந்த ஆண் மகன் வேண்டும். 
  3. மேலும் அவர்களுக்கிடையே பகைமையை வளர்க்க வேண்டும். 
  4. அதுவும் ராவணனின் பலவீனமான பெண்ணாசையை தூண்டி இதை முடித்து விட வேண்டும் என்று எண்ணினாள்.     

ராமனிடம் சென்று தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டாள். ராமன் மறுத்துவிட, இலக்குவனிடம் தன் வேட்கையை வெளிப்படுத்தினாள். அவனும் மறுத்துவிட்டான்.  பிறகு சீதை இருக்கும் வரை ராமன் தன்னை மணக்க மாட்டான் என்று எண்ணி அவள் அருகில் செல்ல முயன்றாள். இதை கண்ட இலகுவனன் இவள் ஏதோ செய்யப் போகிறாள் என்று எண்ணி அவள் மூக்கையும் மார்பகங்களையும் வாளால் வெட்டினான்.

இலங்கைக்கு சென்ற சூர்ப்பணகை, பஞ்சவடியில் நடந்ததை மாற்றி உரைத்தாள்.
தன் அவமானத்தை கூறாமல்  இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து அவன் ஆசையை தூண்டினாள்.
சீதை ராமனிடம் இருப்பதை விட உன்னுடன் இருப்பதே பெருமை என்றவாறு புகழ்ந்து உரைத்தாள்.
சீதையை இராவணன் தூக்கி வந்தால், ராமனும் அவனது தம்பியும் இலங்கை வந்து அவளை மீட்க போரிடுவார்கள். அவர்கள் வெற்றியும் பெறுவார்கள் என்று நம்பினாள்.

இந்த பின்கதையை தெரிந்துக்கொண்டு பின்; கம்பரின் வரிகளை பார்க்கும் பொது மற்றொரு கோணம் பிறக்கும்
 
சூர்ப்பணகை அறிமுகம்  - சூர்ப்பணகை ராவணனை "கொடிய  நோய்" போல  மூலநாசம் செய்ய வந்தவள். 

 நீல மா மணி நிற
     நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும்
     மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்
     பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய
     நோய்
அனாள்



"நீல மா மணி நிற நிருதர் வேந்தனை"
- நீல நிறம் கொண்ட பெரிய மணியயை போன்ற கருநீல நிறத்தை உடைய இராவணனை
"மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்" - அடியோடு நாசம் செய்து முடிக்கும் வலிமை கொண்டவள் இந்த சூர்ப்பணகை.
"மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான் விளை காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள்" - எவ்வாறு ஒரு நோய் நம் உடலில் நம்மோடு சேர்ந்து வளர்கிறதோ, அப்படி இராவணன் கூடவே சூர்ப்பணகையும் வளர்ந்தாள் .
 
மிகச் சரியான காலத்தில் நோய் போல அவனின் இறப்புக்கு காரணமாகவும் இருப்பாள்  என்பதை அறிமுக பாடலிலேயே கம்பர் காட்டுக்கிறார் 


ராவணனின் வம்சத்தையே / நாட்டையே அழிக்க வந்தவள் -
நீர் சூழ்ந்த உலகம்  = இலங்கை 

செம் பராகம் படச்
     செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி
     விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும், ஒண்
     தவர்க்கும், ஓத நீர்
இம்பர்
ஆனவர்க்கும், ஓர்
     இறுதி ஈட்டுவாள்

 

"செம் பராகம் படச் செறிந்த கூந்தலாள்"
- செம்மை நிறமான (செம்பட்டையான) அடர்ந்த கூந்தலை உடையவள்
"வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்" - வெப்பமான (காம) ஆசை கொள்ளும் உடலை உடையவளுமான
"உம்பர் ஆனவர்க்கும்" - தேவர்களுக்கும்
"ஒண் தவர்க்கும்" - சிறந்த தவத்தை கொண்ட முனிவர்களுக்கும்
"ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும்" - நீர் சூழ்ந்த இந்த உலகில் வாழும் மக்களுக்கும் 
"ஓர் இறுதி ஈட்டுவாள்" - ஒப்பற்ற ஓர் அழிவைத் தருவாள் அந்த சூர்ப்பணகை.

இலங்கை ஒரு தீவு. நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த இலங்கையை குறிக்கும் என்று ஒரு பொருள் கொள்ளலாம். இலங்கைக்கே ஒரு முடிவு (அழிவு) ஏற்படுத்த வந்தவள் இந்த சூர்ப்பணகை   


சூர்ப்பணகை தன் உறவினர் அனைவர்க்கும் அழிவு தேடித்தருவாள்.  

எண் தகும் இமையவர், 'அரக்கர்
     எங்கள்மேல்
விண்டனர்; விலக்குதி'
     என்ன, மேலைநாள்
அண்டசத்து அருந் துயில்
     துறந்த ஐயனைக்
கண்டனள், தன் கிளைக்கு
     இறுதி காட்டுவாள்



"எண் தகும் இமையவர், 'அரக்கர் எங்கள்மேல் விண்டனர்; விலக்குதி' என்ன மேலைநாள்" - மதிப்புமிக்க தேவர்கள் 'தங்களை  கொடிய அரக்கர்கள் பகைக்கின்றனர். அவர்களால் எங்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்குவாய்' என முன்பு ஒருநாள் திருமாலிடம் வேண்டினர். 
"அண்டசத்து அருந் துயில் துறந்த ஐயனைக்" - முட்டையில் இருந்து வெளிவந்த ஆதி சேஷன் என்கிற பாம்பின் மீது உறக்கம் கொள்வதை விட்டுவிட்டு, இவ்வுலகில் பிறந்த ராமனை சூர்ப்பணகை கண்டாள் .   
"கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்" - தன் சுற்றத்திற்கு அழிவை உண்டாக்குபவளான சூர்ப்பணகை கண்டாள்.

அரக்கர்களை அழிக்கப்பிறந்த ராமனைக் கண்டாள் என்பது  இனிமேல் இராவணன் மட்டும் அல்லாமல் தன் அரக்கியர் குடும்பத்திற்கே அழிவு ஏற்படும் என்பதை கம்பர் நயம்பட முன் உரைக்கிறார்


சூர்ப்பணகை வஞ்சமகள்

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.




"பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க" - பஞ்சு போன்ற மென்மையை விடவும், ஒளிரும் செழிப்புமிக்க குளிர்ந்த இளந்தளிர்களை விடவும்
"செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி" - செக்க சிவந்த அழகிய தாமரைக்கு நிகரான சிறிய பாதங்கள் உடையவள் ஆகிய
"அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்" - அழகான அன்னமாகவும்,  இளமையான மயில் போல போலவும்,மென்மையான அன்னம் போலவும், மின்னும் வஞ்சிக்கொடி போலவும், கொடிய விஷம் போலவும் வஞ்சனை புரியும் சூர்ப்பணகை, அங்கு இராமனின் முன்னே  வந்தாள்.

சூர்ப்பணகை வஞ்சமகள் = உருவத்தில் அழகும் உள்ளத்தில் வஞ்சமும் என்று பொருள் கொள்ளலாம்.  மற்றொரு கோணத்தில் ராவணனை அழிக்க நெஞ்சத்தில் வஞ்சம் கொண்ட மகள் என்றும் பொருள் கொள்ளலாம்.


ஏழு உலகத்தையும் அழிக்க வல்லவர்

மன்மதனை ஒப்பர், மணி
     மேனி; வட மேருத்
தன் எழில் அழிப்பர், திரள்
     தோளின் வலிதன்னால்;
என், அதனை இப்பொழுது
     இசைப்பது? உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர்
, ஓர்
     இமைப்பின், நனி, வில்லால்.




ராவணனன், சூர்பனகையிடம் மூக்கை வெட்டியது யார் என்ற கேள்விக்கு -  ஏழு உலகத்தையும் அழிக்க வல்லவர் என்று விடை அளிப்பதானால் - ஏழு உலகங்களை ஆளும் ராவணனையும் அழிக்க வல்லவர் என்று மறைமுகமாக உரைக்கிறாள்.

மன் மதனை ஒப்பர் =  அழகில் மன்மதனை போன்றவர்கள்.
மணி மேனி வட மேருத் தன் மதன் அழிப்பர் = உடல் வலிமை வடக்கே உள்ள மேரு மலையின் செருக்கை அடக்கும்
திரள்தோளின் வலி தன்னால்;என் அதனை இப்பொழுது இசைப்பது? = அவர்களின் தோள் வலிமையை இப்போது எவ்வாறு கூறுவது
உலகு ஏழின் நல் மதன் அழிப்பர் ஓர் இமைப்பின் நனிவில்லால் = இமைப்பொழுதில் ஏழு உலகங்களில் உள்ள மிகுந்த வலிமையான வீரனை அழிக்கும் தன்மை உடையவர்கள் என்று கூறினாலும் அது குறைவாகவே இருக்கும்.

தன் அங்கத்தை சிதைத்தது யார் என்ற கேள்விக்கு சூர்ப்பணகை ராம இலக்குவனின்  அழகை, வீரத்தை கூறுகிறாள். ராவணனின் அகந்தையை தூண்டுகிறாள். அவர்கள் வில்லாற்றலால் ஏழு உலகங்களில் உள்ள சிறந்த வீரனை நொடிப்பொழுதில் அழிப்பார்கள். ( இராவணன், "நான்  தான் ஏழு உலகங்களில் சிறந்த வீரன் என்ற அகந்தை உடையவன்"  என்பதை அறிந்தவள் சூர்ப்பணகை) 

இந்தப்பதிவில் சூர்ப்பணகை சூட்சி செய்து ராவணனை அழித்தாள் என்ற கோணத்தை பார்த்தோம்.
 சூர்ப்பணகை ராவணனின் மோகத்தை தூண்டி சீதையை கவர என்னென்ன எல்லாம் கூறினால் என்பதை இரண்டாம் பதிவில் காண்போம்.   

ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி