எழுத்து என்றால் என்ன ?
எழுப்பப் படுதலின் எழுத்தே
எழுதப் படுதலின் எழுத்தா கும்மே.
எழுப்பப்படும் ஒலியை எழுதப் பயன்படும் குறியிடுகளே எழுத்து.
"
அ" என்ற எழுத்து 2000 ஆண்டுகளுக்கு முன்
வேறு வடிவம் பெற்றிருந்தது . ஆனால் அ என்ற சத்தம் மாறாது. இதிலிருந்து ஒலி மாறாது ஆனால் அதை குறிக்கும் வரி வடிவம் மாறும் என்பதால் ஒலியே (சத்தமே ) அடிப்படை என்று அறியலாம்.
சத்தம் (ஒலி) இல்லை என்றால் அதை குறிக்க தேவையில்லை. அதனால் "சைலன்ட் லெட்டர்ஸ்" என்பது தமிழில் இல்லை.
தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
தமிழ் இலக்கண நூலான "தொல்காப்பியத்தில்" தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை மொத்தம் முப்பது மூன்றாக (33) குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து எனப்படுப
அகரம் முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோ ரன்ன
-தொல்காப்பியம்
முதல் எழுத்துக்கள் 30 மற்றும் சார்பெழுத்து 3 ம் சேர்த்து 33 எழுத்துக்களே.
முதலெழுத்து
முதலெழுத்து = உயிர் + மெய் எழுத்துக்கள்
தனித்தன்மை பெற்ற (தனித்த ஒலியை உடைய)
"அ" முதல் "ஔ" வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும்,
"க்" முதல் "ன்" வரை உள்ள 18 மெய் எழுத்துக்களும் சேர்ந்து முப்பது எழுத்துக்களே.
இவை முதல் எழுத்துக்கள் எனப்படும்.
1) உயிர் எழுத்து - ஒலிக்கும் கால அளவை (மாத்திரை) பொறுத்து குறில் & நெடில் என்று வகுக்கப்பட்டது.
குறில் - அ இ உ எ ஒ ஆகிய 5 குறில் எழுத்துக்களை ஒலிக்கும்பொழுது எடுக்கும் கால அளவு ஒரு மாத்திரை.
நெடில்- ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ ஆகிய 7 நெடில் எழுத்துக்களுக்கு இரண்டு மாத்திரை.
அ விற்கும் ஆ விற்கும் ஒலிக்கும் அளவு வேறுபாடு இருப்பதால் இரண்டு வரி வடிவும் உள்ளது (ஆங்கிலத்தில் Small "a" and Capital "A" இந்த இரண்டு எழுத்துக்கும் ஒலி வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை )
2) மெய் எழுத்து அவை பிறக்கும் இடத்தை (மார்பு , மூக்கு, கழுத்து) வைத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என்று வகுக்கப்பட்டது.
வல்லின மெய்கள் -மார்பில் பிறக்கின்றன. ( க், ச், ட், த், ப், ற்)
மெல்லின மெய்கள் - மூக்கு பகுதியில் பிறக்கின்றன. (ங், ஞ், ண், ந், ம், ன்)
இடையின மெய்கள் - கழுத்து பகுதியில் பிறக்கின்றன. ( ய், ர், ல், வ், ழ், ள்)
சார்பெழுத்து
முதல் எழுத்துக்களை சார்ந்து வருவது
முதல் எழுத்துகளால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துகள் "மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால்" ஒலிக்கும் மாத்திரை (கால அளவு ) மாறும்
அவை 3 என்று தொல்காப்பியம் கூறுகிறது
1) குற்றியலுகரம் - குற்றிய + இயல்புடைய +உகரம் ( குறைந்த ஓசை உடைய உ) .
உகரம் ஏறிய வல்லின எழுத்து ( க், ச், ட், த், ப், ற் + உ = கு, சு, டு, து, பு, று) ஒரு சொல்லின் இறுதியில் வரும் பொது அது இயல்பாகவே ஓசை குறைந்து ஒலிக்கும். மாடு ( மா+டு) டு வில் உள்ள "உ" அரை மாத்திரையில் ( பாதி சத்தத்துடன்) ஒலிக்கும்.
2) குற்றியலிகரம் - குற்றிய + இயல்புடைய +இகரம் ( குறைந்த ஓசை உடைய இ)
குற்றியலுகர சொல்லோடு சேரும் சொல்லின் முதல் எழுத்து "ய" (யகர வரிசை) சொல்லாக இருந்தால் - குற்றியலுகரத்தில் உள்ள "உ" என்ற ஓசை "இ" என்ற ஓசையாக இயல்பாகவே மாறும். இது குற்றியலிகரம் எனப்படும்.
களிற்று + யானை = களிற்றியானை ( று - உகரம் -றி இகரமாக மாறியது).
தற்காலத்தில் குற்றியலிகரம் பெருமளவு பயன்பாட்டில் இல்லை
3) ஆய்தம்- தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
அஃகேனம், தனிநிலை, முப்பாற்புள்ளி, எனவும் வழஙப்படுகிறது. தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததால் இது சார்பெழுத்து எனப்பட்டது
நன்னூல் முதலிய நூல்கள் மேற்கூறிய மூன்றுடன்
1) உயிர்மெய்,
2) உயிரளபெடை
3) ஒற்றளபெடை
4) ஐகாரக்குறுக்கம்
5) ஔகாரக்குறுக்கம்
6) மகரக்குறுக்கம்
7) ஆய்தக்குறுக்கம்
ஆகிய 7உம் சேர்த்து சார்பெழுத்து 10 வகை என்கின்றன.
இவற்றை விரிவாக பின்னர் காண்போம்
முடிவுரை
பிற மொழிகளை விட தமிழ் மொழியை கற்றுக்கொள்வது மிகவும் கடினம் என நினைக்கிறோம்.
அனால் எழுத்துக்கள் 30 மட்டுமே. மேலும் மொழிக்கு மூலம் சத்தம் (ஒலி). அந்த ஒலியின் தன்மை அறிந்து, பிறக்கும் இடம் அறிந்து, கால அளவை வைத்து விஞ்ஞான பூர்வமாக எழுத்துக்கள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் கற்பது எளிது ஆகிவிடும்.