26 Nov 2023

சிலேடை -இரண்டு அல்ல மூன்று

சிலேடை


ஒரு சொல்லோ அல்லது சொல் தொடரோ பல பொருள் தருமாறு அமையப் பாடுவது சிலேடையாகும்.  இதற்கு  “இரட்டுற மொழிதல்” என்ற பெயரும் உண்டு. 
 

காளமேகம்


கேட்டவுடன்  திடீர் மழை பெய்வது போல் பாடக்கூடிய திறம் உள்ளதால் காளமேகம் என்று பெயர் பெற்றார். சிலேடை என்றாலே காளமேகம் தான். இரன்டு பொருள்பட பாடுவது கடினம். காளமேகமோ மூன்று பொருள்பட பாடிய பாடலை காண்போம்.  

நீரி லுளதால், நிறம்பச்சை யாற்றிருவால் 
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் 
பல்வினையை மாற்றுதலால், பாரீர், பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை

                                                                                                                                    -காளமேக தனிப்பாடல்கள் 

பிரித்து படிக்க ஏற்றவாறு 

நீரில் உளதால், நிறம் பச்சையால், "திரு"வால் 
"பாரில்" பகை தீர்க்கும் பான்மையால் - சாருமனுப் 
பல் வினையை மாற்றுதலால், பாரீர், பெருவானவில் விண்டு நேர் வெற்றிலை




வானவில் , (விண்டு) விஷ்ணுவிற்கு  நேர் வெற்றிலை என்ற பொருளில் அமைந்த பாடல்.  

பொருள் 1 - வானவில் 


நீரில் உளதால் -  வானவில் நீர்நிறைந்த கார்மேகத்தால் தோன்றுகிறது
நிறம் பச்சையால் - வானவில்லின் ஒரு நிறம் பச்சை
திருவால் -அழகால்  ( திரு என்றால் அழகு, எழில் என்ற பொருள் உண்டு )
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - மழையால் தான் இந்த உலகம் செழிக்கிறது . மழைக்கு எதிரி வறட்சி. வானவில் மழை காலத்தில்  தோன்றுதலால் வறட்சி என்ற பகையை வென்றது.
சாருமனுப்  பல்வினையை மாற்றுதலால்  - மழை இன்பம் தரும். வானவில் தெரிந்தால் மழைக்காலம்  என்பதால் அனைவர்க்கும் ஒரு மகிழ்வை தரும்.
 

பொருள் 2 - விஷ்ணு


நீரில் உளதால் -  பாற்கடலில் பள்ளிக்கொள்வதால் 
நிறம் பச்சையால் -  பச்சை வண்ண மேனி உடையவர் 
திருவால் - திருமகளோடு இருப்பதினால்
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - அரக்கர்களை அழித்து உலகை காத்ததால்.
சாருமனுப்  பல்வினையை மாற்றுதலால்  -தன்னை தேடி வந்தவர்களின் வினை (பாவம்) தீர்ப்பதால்.  


பொருள் 3 - வெற்றிலை


நீரில் உளதால் -  வெற்றிலையை நீரில் வைத்து இருப்பதால் 
நிறம் பச்சையால் -  பச்சை நிறத்தில் இருப்பதால் 
திருவால் - திரு (மங்களம்)  மங்கள காரியத்திற்கு பயன்படுவதால்
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - முற்காலத்தில் பகை தீர்ந்ததன் அடையாளமாக வெற்றிலை மாற்றிக்கொள்வர். 
சாருமனுப்  பல்வினையை மாற்றுதலால்  -துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்வு தருகிறது. 

வெற்றிலையும் விஷ்ணுவும் வானவில்லும் ஒன்றெனக் காளமேகம் நயம்பட உரைக்கிறார். 
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி