நாம் பேசும்போது சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால் "ம்..." என்று சொல்லுவோம். ஆனால், "ம்" என்ற ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள் இலக்கணத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்.
1.உம்மை தொகை (மறைந்து வருவது)
உம்மை என்றால் "உம்" அல்லது "ம்" என்ற எழுத்து.
தொகை என்றால் "மறைந்து இருப்பது".
ஒரு தொடரில் "ம்" என்ற எழுத்து மறைந்து வருவது, உம்மைத்தொகை எனப்படும்
எடுத்துக்காட்டு:
இரவு பகல் = இரவு(ம்) பகலு(ம்) - ம் தொகையாய் (மறைந்து) வந்துள்ளது
சூரியன் சந்திரன் = சூரியனு(ம்) சந்திரனு(ம்) என பொருள் படும்.
காசு பணம் = காசு(ம்) பணமு(ம்)
இனி "ம்" வெளிப்படையாக வந்தால் என்னென்ன பொருள்களில் வரும் என்று பார்ப்போம் .
2.எண்ணும்மை: ( வெளிப்படையாக வருவது)
அண்ணனும் தம்பியும்
இடியும் மின்னலும்
சேரரும் சோழரும் பாண்டியரும்
சொற்களில் "உம்" எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை எனப்படும்.
3 சிறப்பும்மை:
சிறப்பும்மை இரு வகைப்படும். அவை,
i)உயர்வு சிறப்பும்மை:
உன் பேச்சு அமிழ்தினும் இனிது'
இதில் அமிழ்தினும் உள்ள ம் - பேச்சு அமிழ்தை விட "உயர்ந்தது " என்ற பொருளில் வந்துள்ளது.
பொறுமை கடலின்னும் பெரிது
இதில் "பொறுமை" என்ற குணத்தை உயர்வாக சொல்வதற்கு கடலினும் என்ற ம் வந்துள்ளது
ii) இழிவு சிறப்பும்மை:
இந்த உணவை நாயும் விரும்பாது ---> உணவின் தாழ்ந்த தரத்தை விளக்குவதாகும்.
கல்லா ஒருவர்க்கும் ---> கல்வியறிவில்லாத ஒருவருக்கும் (இழிவாக கூறுவது)
இழிவு என்றால் தாழ்ந்த, குறைவான என்று பொருள்படும். இழிந்த தன்மையை விளக்குவதற்கு வருகின்ற "ம்" இழிவு சிறப்பும்மை எனப்படும்.
4. முற்றும்மை:
எண்ணிக்கை முற்று பெறுவதை கூறுவது முற்றும்மை ஆகும்.
மூன்று விரல்களில் மோதிரம் அணிந்துள்ளார்
நான்கு விரல்களில் மோதிரம் அணிந்துள்ளார்
ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்துள்ளார்
இதற்கு மேல் மீதம் ஒரு விரல் இல்லை. விரல்களின் எண்ணிக்கை முற்று பெற்றதை உணர்த்த வந்த ம் என்பதால் முற்றும்மை என்றானது.
முக்கனியும் வேண்டும் ---> மா, பலா, வாழை என்ற மூன்றும் வேண்டும். எண்ணிக்கை முற்ற பெற்றது. மீதம் வேண்டுவது எதுவும் இல்லை.
5 தழீஇய எச்ச உம்மை:
ஒரு நிகழ்ச்சியை தழுவி மற்றொரு நிகழ்ச்சியை கூறுவதற்காக "உம்" சேர்ப்பது, தழீஇய எச்சவும்மை எனப்படும்.
i) இறத்தல் தழீஇய எச்ச உம்மை
எக்ஸாம் ல பாசா ? என்று அப்பா கேட்கும் போது "பக்கத்து வீட்டு ராஜுவும் பெயிலாகிவிட்டான்' என்றான். இதற்கு பொருள் ராஜுவும் பெயிலாகிவிட்டான், நானும் பெயிலாகிவிட்டேன் என்பதுவே. முடிந்த நிகழ்ச்சியை (நான் பாஸ் ஆகவில்லை) குறிப்பதால் இது இறத்தல் தழீஇய எச்ச உம்மை
ii) எதிரது தழீஇய எச்ச உம்மை
தலைவரும் வந்துவிட்டார். இதில் தலைவரே வந்து விட்டார், அனால் தொண்டர்கள் அனைவரும் வரவில்லை என்று தொண்டர்களை வரப்போவதை தழுவி வருவதனால் தழீஇய எச்ச உம்மை எனப்படுகிறது.
ஒவ்வொரு சொற்தொடரிலும் நாம் உபயோகப்படுத்தும் "உம்" / "ம் " -க்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்பதை இலக்கணத்தின் வழியாக அறிந்தோம். ம் ம்..