பாரதி - பெண்ணியம்
ஒரு கவிதையின் தாக்கத்தை அறிய எந்த காலத்தில், எந்த நிலையில் மற்றும் எந்த சமுதாய வரைமுறைக்கு உட்பட்டு எழுதப்பெற்றது என்பதை அறிய வேண்டும். 1900 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சாதி மற்றும் பெண்ணடிமைத்தனம் நிலவிய காலகட்டத்தில் பெண்ணியம் இன்று பேசும் கருத்துக்களை அன்று ஒரு கவிஞன் பாடி வைத்துள்ளான். 11 டிசம்பர் அவனது பிறந்த நாள். ஆம்! பாரதி - இல்லை பாரின் தீ அவன்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடும் காணீர்!
ஞானம்
கல்வி வேறு அறிவு வேறு ஞானம் வேறு. கேட்டு படித்து வருவது கல்வி, கல்வியால் தூண்டப்பட்டு உள்ளிருந்து எழுவது அறிவு, ஞானம் என்பது பல தத்துவங்களை கடந்து கடினப்பட்டு அடைவது. அதை "புவி பேணி வளர்த்திடும் ஈசன் "- உலகத்தை பேணும் கடவுள் ; உயிர்களை பேணும் பெண்ணுக்கு இயற்கையாக வைத்துள்ளான்.
பெண்களை அறிவற்றவர்கள் என்போர் மத்தியில் இவ்வாறு பாரதி கூறிஉள்ளார்.
கல்வி
ஒரு கண்ணாலேயே பார்க்க முடியும் ஆனால் இரண்டு கண்களால்தான் சிறந்த காட்சி கிடைக்கும். அதில் எந்த கண் சிறந்த காட்சியை தருகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதைபோல் ஆண் பெண் சமம் என்ற கருத்தை பதிவிடுகிறார். இரு கண்களில் ஒன்றை குத்தினால் காண்கிற காட்சி தான் கெடும். அதை போல பெண்ணிற்கு கல்வியை தர மறுக்கும் ஆணின் செயல் இரண்டு கண்களில் ஒரு கண்ணை குத்தி காட்சியை கெடுப்பது போலாகும்.
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்
கற்பு
ஒரு பெண் கற்பிழந்தால் அங்கே ஒரு ஆணும் கற்பை இழக்கிறான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே பொறுப்பு என்ற எண்ணம் தவறு. கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது.
திருமணம்
பெண்கள் தாங்கள் விரும்பியவரை கல்யாணம் செய்வதே சரி. வற்புறுத்தி பெண்ணை கல்யாணம் செய்யும் வழக்கத்தை மிதித்துவிட வேண்டும் என்கிறான் பாரதி.
பாரதி பிறந்த நாள் 11.12.1882 தொலைநோக்கு பார்வைக் கொண்டவன் மட்டுமல்ல; 100 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்வி,சமத்துவம்,பொது கற்பு , காதல் திருமணம் என்று இன்றைய புரட்சிக்கு வித்திட்டவன் பாரதி.
அவரது பிறந்த நாள் 11.12.1882. பாரதி கடைசி காலத்தில் வாழ்ந்த வீடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
அருகில் உள்ளது. நேரம் கிடைத்தால் பார்க்கவும். கட்டணம் ஏதுமில்லை.