22 Jan 2023

கிழமை


அருணகிரிநாதர்

குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே


                                                                              கந்தரலங்காரம் - அருணகிரிநாதர்


இளமையான முருகனை குறுஞ்சிக்  கிழவன் என்று உலகம் கூறுவது வியப்பாக இருக்கிறது என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

 

ஔவையார் - ஆத்திச்சூடி

கிழமைப் பட வாழ்

                  
                                                                            - ஔவையார் 

எந்தக்கிழமை  (ஞாயிறு, செவ்வாய் , வெள்ளி ) பட வாழ்தல் வேண்டும் ? என்று ஔவையார் கூறுகிறார்.

திருவள்ளுவர்

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்

                         
                               -திருவள்ளுவர் 

திருவள்ளுவரும்  நட்பை பற்றி கூறும்போது ஏதோ ஒரு கிழமையை சொல்கிறாரே. 

சிலப்பதிகாரம் 

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான், 

மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ


                                                                                -இளங்கோவடிகள்  

மாசாத்துவானை   ( கோவலனின் தந்தை) இருநிதி கிழவன் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகினறார். ஆனால் மணம் ஆகாத கோவலனை  "கிழமையான்" என்று கூறுவது பொருந்துமா ?

கிழமை என்றால் என்ன ?


அரசனே அனைத்து நிலத்திற்கும் உரிமையாளன். அவன் அனுமதித்து உரிமை தர மற்றவர் பெறுவார். அதனால் "கீழ் " என்பது  அரசனின் கீழ்   பெற்ற உரிமை என்று பொருள் பெறும்.     பூமிக்கு கீழ் விளைவதால் "கிழ"ங்கு என்று ஆனது.
கிழ என்பதற்கு  உரிமை என்பதே  பொருள். கிழ +  ஆர் = கிழார்.(உரிமை உடையவர்). பிறகு, கிழார் திரிந்து கிழவர், கிழவன் என்று மாறியது.  

கிழமை = உரிமை - இப்போது மேற்கோளிட்ட பாடல்கள் பொருள்படும் 


அருணகிரிநாதர்


குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே = அழகிய குழந்தையை குறிஞ்சி நிலத்துக்கு தலைவன் ( குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடையவன்)  என்று சொல்லும் உலகமே. 


ஔவையார் - ஆத்திச்சூடி


கிழமைப் பட வாழ் = உரிமை பட வாழ்

திருவள்ளுவர்


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் =  புணர்தல் ,  பழகுதல் வேண்டா = எப்போதும் சேர்ந்து இருத்தல் , அடிக்கடி சந்தித்து பேசி பழுகுதல் தேவையில்லை.  இருவரின் உணர்ச்சியே அவர்களுக்கு நட்பு என்ற உரிமையை தரும்.  (கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்  நட்பு) .

சிலப்பதிகாரம்


மாசாத்துவான் - இருநிதி கிழவன் -  சங்கநிதி ( பொருள் செல்வம்) , பதுமநிதி (அறிவுச்செல்வம்) ஆகிய இரு நிதிக்கு உரிமையானவன்.
கோவலன் = காதலால் பெண்கள் புகழுக்கு உரிமையானவன்.   

முடிவுரை  


கிழமை = உரிமை,  ஞாயிற்றுக்கிழமை  = ஞாயிறுக்கு (சூரியன்) உரிமையான நாள்.
இவ்வாறு பழைய பாடல்களை படிக்கும் பொது கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

மேலும் இலக்கணத்தில் "ஆறாம் வேற்றுமை உருபு "அது" -தற்கிழமை, பிறிதின்கிழமை என இருவகைப்படும்

நாயின் வால்  = தற்கிழமை ,  
செல்வனின் வீடு  = பிறிதின்கிழமை 

நாய் இல்லாவிட்டால் அந்த வாலும் இல்லை - தான் இல்லாவிட்டால் அதுவும் இல்லாமல் போய்விடும். எனவே  தற்கிழமை.  
செல்வன் இல்லாமல் போனாலும் வீடு இருக்கும், செல்வன் மகன் அல்லது மகள் செல்விக்கு சொந்தம் ஆகும். எனவே, தான் இல்லாவிட்டாலும்  அதே பொருள் பிறிது ஒருவர்க்கு உரிமை ஆகி வருவது பிறிதின்கிழமை  எனப்படும்.

ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி