கம்பராமாயணம்
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
கம்பர் அனுமனை பற்றி பாடிய பாடலில், அஞ்சில் ஒன்று என்ற ஒரு தொடரின் மூலம் ஐம்பூதங்களை அழகாக அடுக்கியுள்ளார்.
பஞ்சபூதங்கள் ஐந்து- நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு
அனுமன் "வாயுத்தேவன்" பெற்ற மகன் என்பதால் - "அஞ்சிலே ஒன்று (காற்று) பெற்றான் "
கடலைத் தாண்டி இலங்கைக்கு சென்றவன் - "அஞ்சிலே ஒன்றைத் (நீர்) தாவி"
ராமனுக்காக வானத்தின் வழியாக பறந்துச் சென்று கடலைக் கடந்தான் - "அஞ்சிலே ஒன்று (ஆகாயம்) ஆறாக (வழியாக)ஆரியர்க்காக (ராமனுக்காக) ஏகி"
ஜனகர் சீதையை மண்ணில் கண்டு எடுத்தார் என்பதால் - நில அன்னை பெற்ற மகள் என்ற பொருளில் - "அஞ்சிலே ஒன்று (நிலம்) பெற்ற அணங்கைக் கண்டு"
தன் வாலால் இலங்கைக்கு தீ வைத்தான் என்பதால் - "அஞ்சிலே ஒன்று (தீ) வைத்தான்"
வாயுதேவன் பெற்ற மகன், நிலமகளை காண, ஆகாயத்தின் வழியாக, நீரை தாண்டி, இலங்கைக்கு வந்து தீ வைத்தான் என்று நயமாக ஐந்து பூதங்களையும் ஒரே சொல்லின் மூலம் "அஞ்சிலே ஒன்று " என்ற ஒரு வாக்கியம் கொண்டு விளக்குகிறார் கம்பர்.
இதை சொற்பின்வருநிலையணி என்ற அணி வகைப்படும். ஒரே சொல் அல்லது தொடர் ஒரு பாடலில் பல முறை வந்து வேவ்வேறு பொருள் தருவது.