07 Aug 2022

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு 

கணியன் பூங்குன்றனார்
திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.
 

  யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே


                                                                           கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர் =
இவுலகில் உள்ள  எல்லா இடங்களும் நமது ஊரே.  தேசத்தின் எல்லைகளில் பிரிவு என்பது செயற்கையே.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீமையும் நன்மையையும் பிறர் செய்கைகளால் வருவதில்லை. நம் செயல்களே அனைத்திற்கும் காரணம்.

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
வரும் தீமைக்கு துன்புறுவதும் அல்லது நன்மைக்கு இன்புறுவதும் நாமாக கொள்வதுவே. 

சாதலும் புதுவது அன்றே,
இறப்பும் இவ்வுலகிற்கு புதியது அல்ல. முதல் உயிர் பிறந்ததிலிருந்தே இறப்பு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. 

வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
இன்பம் மட்டுமே வாழ்வு என நினைத்து மகிழ்வது அறிவான செயலல்ல.

முனிவின்இன்னா தென்றலும் இலமே,
கோவத்தில் வாழ்வை வெறுப்பதும் புத்திசாலித்தனம் அன்று.

மின்னொடுவானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல்

மின்னலுடன் வனத்தில் இருந்து பொழியும் மழைத்துளி  கல்லில் விழுந்தாலும் பேரி ஆற்றை அடைந்து பிறகு கடலை நோக்கி சீராக செல்வது போல

ஆருயிர்முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,

நமது உயிர் அதன் ஊழுக்கு (விதி) ஏற்ப அமையும் என்பது சான்றோர் கூறிய வாக்கு.

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எனவே, செல்வத்தாற் பெரியவரை  வியந்து மதித்தலும் செய்ய மாட்டோம்  ; சிறியோரை இகழ்தலும் செய்ய மாட்டோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே கருதுவோம்.


விரிவுரை
யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் =  எந்த இடமும்   யாவரும் =  எல்லா மக்களும்   கேளிர் = உறவினர்கள்
எனது ஊர் , எனது இடம் எனபது ஒரு செயற்கை பிரிவினையே.
"வசுதேவ குடும்பகம்' - உலக மக்கள் யாவரும் நமது உறவினர்களே
சர்வதேச குடி உணர்வு 2400 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்பது வியப்பு.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீதும் =
தீமை  ; பிறர்தர வாரா = பிறரால் ஏற்படுவது இல்லை.
நல்லது கெட்டது என்பது எல்லாம் ஒருவர் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அமையும்.
ஒருவனின் வினை படியே அவனது இன்ப துன்ப அனுபவங்கள் அமைகிறது. பிறரால் அல்ல. 

 நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
நோதலும் =
துன்பப்படுத்தல்   ; தணிதலும் = துன்பம் குறைத்தலும்;  அவற்றோ ரன்ன = அது போலவே
துன்பமும் இன்பமும் ஒருவனின் செயல்களை பொறுத்ததே அமைவது போல் அதனால் துன்பப்படுத்தலும் இன்பப்படுத்தலும் அவன் கைகளில் உள்ளது. 


சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
புதுவது =
புதியது ;  இலமே=  இல்லை
இறப்பு இவ்வுலகிற்கு புதியது அல்ல. இறப்பை கண்டு அஞ்சுவது நிகழ்காலத்தை அனுபவிக்க தடையாய் இருக்கும்.   அதனால் இன்பம் அனுபவிப்பதே வாழ்வு என்று இருப்பதும் துன்பம் தரும். "வேண்டுதல் வேண்டாமை " என்று குறளில் உள்ளது போல் பட்டும் படாமலும் வாழ்வது அறிவுடமை ஆகும்.   


முனிவின் இன்னா தென்றலும் இலமே
In anger; To perceive things as undesirable is a folly;
முனி = கோபம் ; இன்னா தென்றலும்= இன்னாது  என்றாலும்  ( இனியவை அல்ல என்று சொல்வது )
கோவம் காமம் மயக்கம் என்பது உயிர் குணங்கள். கோவத்தின் பொது ஒன்றை நல்லது இல்லை என்று வெறுப்பது அறிவுடைய செயல் ஆகாது. ஆறுவது சினம்என்னும் ஔவையார் மொழி போல் - காலத்தால் தணிந்து விடும் கோவம்.   

மின்னொடுவானம் தண்துளி தலைஇ யானாது
தண்துளி =  குளிர்ந்த மழைத்துளி;   தலைஇ = பொழிய
கடலில் இருந்து ஆவியாய் மேலெழுந்து மேகமாய் மாறி குளிர்ந்த நீராய் மண்ணில் மீண்டும் வீழ்ந்து


கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

பொருதல் = அலைமோதல்; இரங்கல் = ஒலித்தல்; ; மல்லல் = மிகுதி
மழையாக நிலத்தில் வீழ்ந்து "பேரி" ஆற்றை சென்று அடைவது போல்


நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
புணை = தெப்பம், குளம்
மழை பெய்து அடிக்கும் வெள்ளம் ஆற்றில் சேர்ந்து கடலை அடைவது போல்; 


முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
திறவோர் = அறவோர் ;அறிவில் தெளிந்தார்
உயிர் விதிப்படி அனுபங்களை பெறும்.   என்று சான்றோர் கண்டு தெளிந்தனர்


காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
காட்சி = அறிவு; மாட்சி = பெருமை.
கண்டு தெளிந்து உண்மை அறிந்தனர் என்பதால் ,

பெரியோரை வியத்தலும் இலமே,
பெருமையாக ஒருவரை எண்ணி வியத்தலும் முட்டாள்தனமே. 


சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
அதைப்போல்   சிறியோரை இகழ்ந்து பேசுதலும் முட்டாள்தனமே ஆகும்.

ஒருவனிடம் பொருளோ அல்லது அறிவோ நிரம்பி இருக்கும் என்றால் அது அவன் செய்த வினை பயன். விதியால் வந்தது என்று அறிந்து உள்ளவனை வியந்து புகழ்வதும் இல்லாதவனை இகழ்தலும் அறிவுடைய செயல் என கற்றவர்கள் கருதமாட்டார்கள். 


முடிவுரை
உலகம் யாவும் ஒரு தேசமே. நாம் மட்டுமே நமது இன்ப துன்பங்களுக்கு காரணம். இயற்கை விதிப்படி எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறு நடக்கும். அதனால் பொருள் நிலைக்கு ஏற்ப சக மனிதர்களை கண்டு வியத்தலும் இகழ்தலும் அறியுடைய செயல் அன்று. 2400 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு தெளிவான சிந்தனை!       
,




 
                                                         
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி