06 Nov 2021

நட்பு - பாகம் 2 (கூடா நட்பு)



நாலடியார்

யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

                                                                            நாலடியார் 213

 யானை யானையவர் நண்பொரிஇ  = "யானை" போன்று பெருமைகளை உடைய (கல்வி, செல்வம் போன்றவற்றில் மிகவும் சிறந்தவர் ஆயினும்).

நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் = "நாய்" போன்றவர்களின் நட்பை தேடி பெறுதல் வேண்டும்.

யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்  = யானை மதம் பிடித்தால்  தன்னோடு பலநாள் பழகிய பாகனையே மிதித்து கொன்றுவிடும்.

எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் = பழகிய நாயின் மீது வேள்  எறிந்து,  குருதி(இரத்தம்) வழியும் போதிலும் வாலாட்டும் தன்மை உடையது நாய்.

யானை பலநாள் பழகிய பாகனை மதம் பிடித்தால் கொன்றுவிடுவது போல,  கல்வியும் செல்வமும்  உள்ளவர்களாயினும்  சிலர் நேரம் வரும்போது  நம்மை விட்டு விலகுவர் அல்லது சுயநலமாக செயல்படுவர். வெகு சிலரே நாம் கடிந்து கொண்டாலும் நாய்யை போன்று நம்மை பின்தொடர்ந்து (நம்முடன் தொடர்ந்து) வருவர்.  யானை போன்ற சுயநலவாதிகளின் நட்பை விட நாய்யை போன்ற உண்மையான அன்பு கொண்டவர்களின் நட்பே சிறந்ததது.     

பொருளிலும் புகழிலும் யானையை போன்ற பெருமை உடையவராயினும் சுயநலவாதிகளின் நட்பை,  கூடா நட்பு என்கிறது நாலடியார்.


இன்னா நாற்பது     

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.

                                                                      இன்னா நாற்பது - 24


ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா = காவல் இல்லாத ஊரில் வாழ்வது துன்பம் தரும்.
 
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா = அதை விட தீய செயல்கள் செய்பவர்களின்  அருகே இருத்தல் துன்பம் தரும்.

காமம் முதிரின் உயிர்க்கு இன்னா ஆங்கு இன்னா =  காமநோய் முற்றினால் உயிருக்கே  துன்பமாகும்.

யாம் என்பவரோடு நட்பு = இவை எல்லாவற்றிலும் மிகவும் துன்பம் தருவது "நான் மட்டுமே" என்ற எண்ணம் கொண்டவனின் நட்பு.  

நான் என்ற சுயநல குணத்துடன் இருப்பவனின் நட்பு காமத்தை விட, கயவர்களை விட, காவல் இல்லாத ஊரில் வாழ்வதை விட மிகவும் துன்பம் தரும்.
 

திருக்குறள் 

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று

                                                                     திருக்குறள்  - 825

மனத்தாலே  ஒன்றுபட்டு நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, அவர்  வாயளவில் இனிமையாக பேசுவதை  கண்டு  நண்பர் என்று ஏமாந்து விட கூடாது.  (நட்பு என்பது மனதளவில் ஒன்றுபடுவது.  வெறும் சொல் அளவில் அல்ல என்பதை ஒரு எச்சரிக்கையாக வள்ளுவர் நமக்கு கூறுகிறார்) 


கம்பராமாயணம் 

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
     அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
     அமிழ்தினும் சீர்த்த அன்றே

                                                                          கம்பராமாயணம்

குகன் மீனும் தேனும் கொண்டுவந்த போது ,  உள்ளத்தில் அன்புடன் காதல் நிறைந்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்தது என்பதால் அவை அமிழ்தை விட சிறந்தது என்கிறான் ராமன்.  உள்ளத்து அன்பில் அமைவதே உண்மை நட்பு  என்ற வள்ளுவரின் கருத்தை கம்பரும் உறுதிப்படுத்துகிறார்.


மகாபாரதம் ( கூடா நட்பு கேடாய் முடியும் )

தீய எண்ணங்களின் பிறப்பிடம்  - சகுனி
அறமல்லாத செயல்களை செய்ய முற்படுபவன்-துரியோதனன் .
தீய செயல்களை செய்ய அச்சப்படாதவன் -  துச்சாதனன்.



நல்லவர்களைப் புறந்தள்ளி கர்ணன்  இவர்களுடன் நட்பு கொண்டான். அதனால் அவனும் துன்புற்று அறம் அல்லாத செயல்களுக்கு துணை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
கூடா நட்பு கேடாய் முடிந்தது. 

முடிவுரை


 நாலடியார்
  -  யானை போன்று பெருமை உடையவரே ஆயினும் சுயநலமாக இருப்பவர்களின் நட்பை விடல் வேண்டும்
இன்னா நாற்பது  -  நான் என்ற எண்ணம் கொண்டவர்களின் நட்பு இனியவை அல்ல. துன்பமே தரும் 
திருக்குறள் - மனத்தால் ஓன்றுபடாத வெறும் வாய் வார்த்தைகளால் இனிமையாக பேசுவது நட்பு ஆகாது. 

இந்த அறிவுரைகளை மீறி கூடா நட்பு கொண்டால் அது கேடாய் முடியும் என்பதற்கு கர்ணனின் வாழ்க்கையே சான்று.  






ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி