25 Oct 2021

இவரைத் தெரியுமா? #2


  • இவர் ஒரு நாட்டுப்புறவியலாளர்,  20,000கும் மேற்பட்ட பழமொழிகளை தொகுத்துள்ளார்.

  • இவர் திருக்குறளில் ஆராய்ச்சி செய்து "திருக்குறள் ஆராய்ச்சி தொகுப்பு" என்ற நூலை வெளியிட்டார்.

  • இவர் எழுதிய "வீரர் உலகம்" நூல், சாகித்ய அகாடமி விருது பெற்றது.

  • இவரை சிலேடைகளின் மன்னன் என்று கூறுவர்.

  • இவர் வாகிச கலாநிதி  என்ற பட்டம் பெற்றவர்.

  • இவர் தமிழ் தாத்தா உ.வே.ச அவர்களின் மாணவன்.


இவர்...


...



...
கி. வா. ஜ என்றழைக்கப்படும் வாகிச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் (1906 - 1988). இவர் திண்ணை பள்ளி மூலம் தன் கல்வியை ஆரம்பித்தார், பின்பு கிருஷ்ணராயபுரத்தில் மேற்படிப்பு படித்தார். இவருக்கு கணிதமும், இயற்பியலும் பிடித்தமான பாடங்கள். சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார்.

1927ஆம் ஆண்டு உ.வே.ச விடம் மாணவனாக சேர்ந்து அவர் அமரர் ஆகும் வரை உடன் இருந்து தொண்டாற்றினார். உ.வே.சா  கூற கூற , கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ உடன் இருப்பார். கலைமகள் ஆசிரியர் பணியுடன்  உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளும்  தொடர்ந்து செய்து வந்தார். தமிழன்னை உ.வே.சா வால் புதுப் பொலிவு பெற்றதில் கி.வா.ஜ விற்கும் முக்கிய பங்கு உண்டு.

கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும், சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும், நாட்டுப்புறவியலாளராகவும் விளங்கினார். (நாட்டுப்புறவியல் - இசை மற்றும் இலக்கிய வாய்வழி நாட்டுப்புற கலை).

எழுத்து, பேச்சு இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் பற்றி சுமார் 150 புத்தகங்களை எழுதியுள்ளார். கி.வா.ஜ பழைய நெறிகளை கற்று, புதிய எளிய கவிதைகளை அளித்தார்.

சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார். கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமும் தான் "கலைமகள்" இதழ்  தரமான நிலைக்கு உயர்ந்ததற்கான  அடிப்படை  காரணம்.


கி.வா.ஜ பெற்ற பட்டங்கள்
• வாகீசகலாநிதி
• திருமுருகாற்றுப்படை அரசு
• தமிழ்க்கவி பூஷணம்
• உபன்யாசகேசரி
• செந்தமிழ்ச்செல்வர்
• தமிழ்ப்பெரும்புலவர்
• திருநெறித்தவமணி


அவர் உரை எழுதிய நூல்கள் :
அபிராமி அந்தாதி, திருக்குறள் - ஆராய்ச்சிப் பதிப்பு..

அவர்எழுதிய  நூல்கள்:
மலை அருவி(நாட்டுப்புறப்  பாடல்கள்), ஏழுபெரும் வள்ளல்கள், கோவூர் கிழார், என் சரிதம்  (உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரம்), வீரர் உலகம், வாழும் தமிழ்- தொல்காப்பிய சொல்லதிகார ஆராய்ச்சி..



மேலும் கி. வா. ஜ பற்றி  அறிந்துக்கொள்ள

கி. வா. ஜ பற்றி கலைமாமணி கு. ஞானசம்பந்தன்

கி.வா.ஜ பற்றிய உரையாடல்

கி. வா. ஜ பற்றி சுகிசிவம் 


ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி