காட்சி 5: உழிஞை
அரசன் தன் படைகளோடு எதிர்நாட்டுக் கோட்டையை முற்றுகையிடுகிறான். ஒரு நாட்டின் அரசனுக்கு அரண்கள் இன்றியமையாதது. (அரண் = அரசனின் பாதுகாப்புகள்)
நில அரண் = மதிற்சுவர்
நீர் அரண் = அகழிகள்
காட்டரண் = கோட்டைகிச்சுற்றி குறுங்காடுகள் (மிளை)
மலையரண் = மலைகள் நடுவில் / மலைக்குமேல் கோட்டை.
ஒவ்வொரு அரணும், ஒவ்வொரு வகையான பாதுகாப்பை அளிக்கும்.
நீர் அரண் காலாட்படையின் தாக்கத்தை குறைக்கும் , காட்டரண் அம்பு மற்றும் வேல் எரியும் படையின் தாக்கத்தை குறைக்கும், மலையரண் யானை படையின் தாக்கத்தை குறைக்கும். அரண்மனை = அரண் + மனை (பாதுகாப்பான வாழ்விடம்).
இப்பொழுது முற்றுகையிடவரும் படைகள் காடுகளையும் மலைகளிலும் தாண்டி, மதிற்சுவரை அடைந்தனர் . உழிஞை தாவரம் எப்படி மரத்தை சூழுந்துகொண்டு வளருமோ, அதுபோல் படைகள் மதிற்சுவரை சூழுந்துகொண்டனர். பின்பு ஏணிகள் மூலம் சுவற்றை தாண்ட முனைவார்கள்.
பூ
எதிர் நாட்டைக் முற்றுகையிடும் வீரர்கள் உழிஞைப் பூவை சூடுவார்கள்
காட்சி 6: நொச்சி
முற்றிகையிடப்பட்ட கோட்டையின் உள்ளிருக்கும் வீரர்கள், பகைவர்கள் மதிற்சுவற்றை தாண்டாவிடாமல் பாதுகாப்பார்கள். பகைவர்கள் அகழியை கடக்க முற்படும்பொழுது மதிலின்மேல் மறைவாக நின்று அன்புகளையும் ஈட்டிகளையும் எய்வார்கள்.
இனி தாமதம் செய்ய இயலாது, அரசன் ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.
தன் வீரர்களை கொண்டு போர் செய்ய போகிறானா அல்லது மக்கள் உயிர் கருதி சரணடைய போகிறானா ?
புறநானூறு பாடல்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளின் கோட்டையை முற்றுகை இட்டு பல நாட்கள் கழிந்தபின், நெடுங்கிள்ளிக்கு கோவூர்கிழார் புலவரின் அறிவுரை
"அறவே ஆயின் நினது எனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுக்குதல்
நாணுத்தக வுடைத்துஇது காணுங் காலே "
அறச்செயல் என்றால் இது உன் கோட்டை என்று கூறி கதவை திற,
ஆண்மைசெயல் என்றால் கதவை திறந்து போர் செய்,
இரண்டும் செய்யாமல், உள் இருக்கும் மக்களை பசியால் வாடவைப்பது
அறமும் இல்லை ஆண்மையும் இல்லை.
இதை கேட்டு நெடுங்கிள்ளி சமாதானத்துக்கு வரத் துணிந்து மதிற்கதவைத் திறந்தான்.
பூ
எதிர் நாட்டின் முற்றுகையை எதிர்த்து போராடும் வீரர்கள் நொச்சிப் பூவை சூடுவார்கள்
காட்சி 7: தும்பை
போர்க்களம்... இரு அரசர்களும் பொதுவான களத்தில் போர் செய்வோம் என்று முடிவுசெய்தனர். இருபடைகளும் தனது வீரத்தை நிலைநாட்ட போரிடுகிறார்கள். நில ஆசியை விடுத்து,வீர உணர்ச்சிக்காக போர்செய்வதே சிறந்தது என்னும் கொள்கையை பழங்கால மன்னர்கள் வைத்திருந்தார்கள்.
இப்போர்க்களத்தில் இருபடையினரும் தும்பைப்பூவை சூடிக்கொண்டு தங்களது வீரத்தை நிருபிக்க போர்செய்வார்கள்.
காட்சி 8: வாகை
வெற்றி! போரில் வென்ற அரசன் வாகைப்பூ மாலையை சூடி வளம் வருவான். வீர்களும் மக்களும் தங்களுது வெற்றியை கொண்டாடுவார்கள். வீழ்த்தப்பட்ட நாடு வெற்றி பெற்ற அரசன் ராஜ்யத்தின் கீழ் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வரும். ( பல தருணங்களில் வீழ்த்தப்பட்ட அரசனே தொண்டர்ந்து அவனது நாட்டிற்கு அரசனாக இருப்பான். வரிகளை மட்டும் வென்ற அரசனிடம் செலுத்துவான் )
புலவர்கள் வெற்றி பெற்ற அரசனின் வீர செயகளை போற்றி பாடுவார்கள் (எ-டு: கலிங்கத்துப்பரணி)
வெட்சிநிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை- அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம் -
எட்டு திணைகளையும் உள்ளடக்கிய பழங்கால பாட்டு
(வட்கார் = பகைவர் ; உட்காது = அஞ்சாது ; பொருவது =போரிடுவது ; செரு = போர்)
முடிவுரைஇக்கட்டுரை மூலம் தமிழர்கள் போரிலும் இலக்கணத்தோடு நெறிமுறைகளை பின்பற்றி தங்களது வீரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதாய் அறியலாம். போர் என்றால் வெறும் மிருகத்தனமான உயிர் வதைப்பு மட்டும் அல்ல,
போரும் ஒரு கலை தான், அதற்கென்று வரைமுறைகள் இருக்கிறது என்பதை சங்க நூல்களிலின்
திணை இலக்கணம் மூலம் காணலாம் .
குறிப்பு:
சங்க நூல்களுக்குள் திணை பிரிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதை காணலாம்
1. தொல்காப்பியம் = 7 திணைகளாக பிரிகின்றது ( வெட்சி மற்றும் கரந்தையை ஒரே துணையாகவும், நொச்சி மற்றும் உழிஞையை ஒரே துணையாகவும் வகுத்து, பாடாண் தினையை சேர்த்துள்ளது ).
2. புறநானூறு = 11 திணைகளாக பிரிகின்றது ( வெட்சி,கரந்தை ....வாகை, பாடாண், கைக்கிளை மற்றும் பெருந்திணை)
3. புறப்பொருள்வெண்பாமாலை = 12 திணைகளாக பிரிகின்றது (பொதுவயல்)
பொருள் இலக்கண அறிமுகம்
வீரர் உலகம் - கி.வா.ஜ