05 Sep 2021

போர் நெறிகள் #1

சங்ககால  தமிழர்கள் வாழ்வியலை இரண்டு பரிமாணங்களாக பிரித்தனர் - அகம் & புறம். 

அகம் - காதல், அன்பு, ஆசை ...

புறம் - போர், அரசியல் ...

போர் என்றால் என்ன?

முரட்டுத்தனமான வீரமா?
காட்டுமிராண்டித் தனமான செயல்களா?
அல்லது போருக்கென்று வரையறைகள்  இருந்தனவா

சங்ககாலத்தில் புற வாழ்வுக்கென்று நெறிகள் இருந்தன. அதைப் புறத்திணை என்று வகைப்படுத்தி அதில் பல உட்பிரிவுகள்  அமைக்கப்  பெற்றிருந்தன.  சங்ககாலப்  போர்முறை பற்றிய இலக்கணத்தைக் (திணைகள்) காண்போம்.

வீரர்கள் போரின் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பூக்களை அணிவது வழக்கம். எனவே, போரின் வெவ்வேறு நிலைகளை (திணைகளை) பூக்களின் பெயர்களைக் கொண்டே  குறித்தனர்.

காட்சி 1: வெட்சி 

இது போருக்கான முதற் நிலை. அரசன் பகை நாட்டின் மேல் போர்புரிய முடிவுசெய்த பிறகு, தனது வீரர்களை பகைவர்  நாட்டிற்கு அனுப்பி  ஆநிரைகளைக் (பசு, ஆடு) கவர்ந்து வர ஆணையிடுவான். வீரர்கள் பகை  நாட்டில் மேய்ந்துக் கொண்டு இருக்கும் பசுக்களையும், ஆடுகளையும் தங்களது நாட்டிற்கு பிடித்து வருவார்கள்.

ஏன்  ?
அக்காலத்தில்  ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆநிரைகளை நம்பியே  இருந்தது, (வேளாண்மை முதல் பால் உற்பத்திவரை) இவற்றை கவர்ந்து செல்வதால் நாட்டின் பொருளாதாரம் நிலை குலைகிறது.  
பசுக்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்ததால், போர்களில் ஆநிரைகளை தாக்ககூடாது என்பதை ஒரு போர் தர்மமாகவே கொண்டனர்.

"...ஆவினைக் களவினால் தாமே கொண்டு வந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது, அறமேயாம் ! "                                                           

                                                                      நச்சினார்க்கினியர். தொல்காப்பிய உரை

பூ
ஆநிரை கவர்தளுக்குச்  செல்லும் வீரர்கள் வெட்சிப்பூவை சூடிக்கொண்டு செல்வார்கள். கவர்ந்து வந்த பசுக்களை தனது நாட்டினரிடம் பகிர்ந்தளித்து, போரின் முதல் வெற்றியை  கொண்டாடுவார்கள்.
 
வெட்சிப்பூ = இட்லி பூ
 
தர்மம்
போர் தர்மம் - பசுக்களை, குழ்நதைகளை, இயலாதவர்களை, வாரிசு இல்லாத ஆண்களை போரில் தாக்கக்கூடாது.
இவ்வாறு போர்நெறிகள் சங்ககாலத்தில் இருக்க ,அதே சம காலத்தில் ரோமானிய மற்றும் கிரேக்க போர்களில் வெற்றி பெற்ற அரசன் தோல்வியுற்ற நாட்டின் வீரர்களையும் பெண்களையும் அடிமைப்படுத்தி ஏலத்தில் விற்றது ஒப்பிடத்தக்கது. 

காட்சி 2: கரந்தை   

ஆநிரைகளை இழந்த ஆயர்கள் தங்கள் அரசனிடம் முறையிடுவார்கள். அரசன் வீறுகொண்டு, தன் வீரர்களுக்கு இழந்த ஆநிரைகளை மீட்டு வர ஆணையிடுவான்.

ஏன் ? 
நிரை மீட்கும் செயல் என்பது அரசன் எதிர்த்து போரிட தயாராக உள்ளான் என்பதைக் காட்டும். இல்லையெனில் "நான் உன்னினடம் சரணடைகிறேன்" என்று பணிவதாகும்.

பூ 
பசுக்களை மீட்டு வர வீரர்கள் கரந்தைப்பூவை அணிந்துகொண்டு செல்வதை "கரந்தைத்திணை" என்கிறது தமிழ் இலக்கியம். 

கரந்தை = கொட்டைக் கரந்தை.


காட்சி 3: வஞ்சி 


போர் தொடங்கிவிட்டது. அரசன் தன் படைகளுடன் எதிர் நாட்டை கைப்பற்ற செல்கிறான்.நிரை கவர்தலும், மீட்டலும் போருக்கான முற்செயல்கள்.  போர் வரக்கூடும் என்ற நிலையில்  வீரர்கள் மட்டுமே இருப்பார்கள், அச்சத்தால் பொதுமக்கள் அனைவரும்  பாதுகாப்பான இடத்திற்கு  இடம்பெயர்வார்கள்.

"எஞ்சா மண்தசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே" 


                                                                    - தொல்காப்பியம்.

இரு பெருவேந்தர்க்கும் உள்ள மண்ணாசையால், அங்கு வாழும் மக்களுக்கு அச்சம் உண்டாக, அந்நாட்டிற்கே சென்று ஒரு அரசன் மற்றொரு அரசனை வெல்லுதலைக் குறிக்கிறது வஞ்சித் திணை.
 
பூ 
எதிர் நாட்டைக் கைப்பற்றச் செல்லும் அரசன் வஞ்சி மாலையையும் வீரர்கள் வஞ்சிப் பூவையும்  சூடுவார்கள். 


காட்சி 4: காஞ்சி

வஞ்சியின் எதிர்ச் செயலாக, கைப்பற்றவரும் எதிரிகளைத் தாக்கி  தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ள  வீரர்கள் தயாராக இருப்பார்கள்.

போர்தந்திரங்கள் பல ஆராய்ந்து, அரசன் தகுந்த வீரர்களுக்கு படைகளை வழங்குவான் (படைவழக்கு).இனி போரைத் தவிர்க்கமுடியாது என உணர்ந்தபின், மக்கள் தங்களது உடைமைகளை முடிந்தவரை பாதுகாத்துக்கொள்வர். (வேளாண்மைக்கு தானியங்களை புதைத்து வைத்துக் கொள்வர்) 

"வேஞ்சின மாற்ருன் விடுதர, வேந்தன் 
காஞ்சி குடிக் கடிமுண் கருதின்று" 

                                                                                புறப்பொருள் வெண்பாமாலை

கோபத்தை உடைய பகையரசன் வந்து தன் எல்லையில் பாளையம் கொள்ள, அரசன் காஞ்சிப் பூவை அணிந்து காவல் செய்ய வேண்டிய இடங்களைக் காப்பாற்ற  கருதுவது காஞ்சித்திணை.


                                                                                     
                                                                                                                                                             
போர் தொடரும் ....  (போர் நெறிகள் #2)





ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி