22 Aug 2021

செல்வம்

செல்வம் எத்தகையது ? -  நிலையானதா? தேடித்தேடி சேர்க்க வேண்டிய பொருளா?  
ஔவையார், வள்ளுவர், திருமூலர்  மற்றும் ஏனைய சான்றோர்கள் எவ்வாறு செல்வத்தை மதிப்பீடு செய்தார்கள் என்பதை காண்போம்.

 ஔவையார் - செல்வம் நிலையானதல்ல.


அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.

                                                                     ஔவையார்

வறிஞர் = ஏழ்மை ;  உண்டாக  - நிலையானதாக

ஆறு வகையான உணவை நிதானமாய் அமர்ந்து தன் மனைவி ஊட்ட, அடுத்த வாய் சோற்றை வேண்டாம் என்று கூறிய செல்வந்தரும் , ஒரு நாள் அடுத்த வேலை கூழுக்காக  பிச்சைக்காரனாய் சென்று இரக்க நேரிடும். இவ்வாறு இருக்க, நிலையான பொருள் என கருதி செல்வதை சேர்ப்பது அறிவான செயலன்று.


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்

                                                                        ஔவையார்

சேர்க்க வேண்டிய பொருள் எண்ணற்றவை என்று நினைத்து எவ்வளவு முயற்சி செய்தாலும்  , விதியில் என்ன அளவு உண்டோ அந்த அளவு பொருள் தான் ஒருவனுக்கு கிடைக்கும்.அதனால் அளவுக்கு அதிகமாக பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டு  அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல மனிதன் என்ற நற்பெயரை பெற முயல்வதே சிறந்த செல்வமாகும்.  
 

நாலடியார் - செல்வம் சக்கரத்தை போல் சுழலும்  

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்

                                                                     நாலடியார் 

துகள்தீர்  - குற்றமற்ற; பகடு = ஏர் ; சகடகால்  = சக்கரம் 
 
குற்றமற்ற  செல்வம் ( அற வழியில் வந்த பொருளை)  உண்டான காலம் முதலே, ஏர் நடந்த உணவை ( செல்வதை) பலப்பேரோடு பகிர்தல் வேண்டும்.  யாரிடத்திலும் நிலையாக நிற்காது செல்வம். அது சுற்றும் சக்கரத்தைப் போன்று சுழன்று கொண்டே இருக்கும்.

செல்வதை பகிர்தல் வேண்டும். இருக்கும் போதே  அனைவர்க்கும் கொடுத்தல் வேண்டும், கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் செல்வம் சக்கரத்தை போன்று சுழன்று நம்மை நீங்கும். அதனால் இருக்கும் போது கொடுத்து விடுதல் சிறந்தது  என்கிறார் நல்லதனார். 


திருவள்ளுவர்  

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

                                                                     திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333

 அற்கா இயல்பிற்றுச் செல்வம் – நிலையில்லாதது செல்வம். அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் – அதை பெற்றபோதே நல்ல காரியம் செய்து கொள்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

                                                                     திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 332

கூத்தாடுகின்ற இடத்தில் (நாடக மேடை) கூட்டம் கூடுவதைப் போல உனக்கு செல்வம் சேரும்.  நாடகம் முடிந்த பின்னர் கூட்டம் கலைந்து  போவதை போல அந்த செல்வம் கரைந்து  போய்விடும். நிலையில்லாத செல்வம் இருக்கும்போதே நிலையான அறத்தை அறிவுள்ளவர்கள் செய்து கொள்வார்கள் என்கிறார் வள்ளுவர்.

செல்வம், நாடகம் பார்க்க வருகின்ற கூட்டத்தை  போன்றது என்ற உவமை மிகவும் பொருத்தமானது.  எவ்வளவு கூட்டம் வரும் என்பதும் நம் கையில் இல்லை. எப்போது நம்மை பிடிக்காமல் கலைந்து  போகும் என்பதும் நம் கையில் இல்லை.


திருமந்திரம் 

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

                                                                    திருமூலர் 

தன் நிழல் தனக்கு வெயிலில் இருந்து நிழல் தராது என்பதை அறிந்தும், அறிவிலார் தன் செல்வம் தன் துன்பத்தை போக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். செல்வம் புறப்பொருள். உயிரும் உடலை விட்டு பிரியும் என்று இருக்கும்போது புற  உடலுக்கு சேர்த்த செல்வம் எவ்வாறு உயிருக்கு நன்மை விளைவிக்கும்?   செல்வம் நிழல் போல் கூட வரும். செல்வம் பெருகினால் துன்பம் பெருகுமே தவிர துன்பத்தை போக்க வல்லது இல்லை. 


சித்தர் பாடல்கள்

தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ 

                                                                            (குதம்பைச் சித்தர்.102-03)

 வாழ்நாள் முழுதும்  தேடிய செல்வங்கள் யாவும் இறக்கும்  போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் இறுதியில் அணு அளவு செல்வத்தை கூட எடுத்து செல்ல முடியாது. இதை வாழ்க்கை முடிவில் உணர்ந்தால்  மேலும்  துன்பமே மிஞ்சும் 

செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ 

                                                                          (பாம்பாட்டிச்சித்தர் ,பா. 44)

மறலி = எமன்; 
மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ? என்று கேள்வி எழுப்புகிறார்.

கண்ணதாசன் 

கருத்துக்களை எளிதாய் சொல்ல வேறு யார் உண்டு . பாத காணிக்கை (1962) படத்தில் கண்ணதாசனின் இந்த  பாடல் ஒன்றே  போதுமானது. 

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

                                                                        கண்ணதாசன்
 


முடிவுரை  

செல்வந்தரும் விதியினால் உணவுக்கு இரக்க  (பிச்சையெடுக்க) நேரிடும். எவ்வளவு முயன்றாலும் விதியின் வழி சேரும் செல்வமே தங்கும். - ஔவையார்

 செல்வம், சக்கரம் போல் சுழன்று மாறி மாறி  மனிதர்களிடம் சேரும். - திரிகடுகம்

நிலையில்லாதது செல்வம் - அது நிலைக்கும் பொழுது  நல்லறம் செய்க.
நாடகம் பார்க்கும் கூட்டம் போல் வருவதையும் போவதையும் நம்மால் தடுக்க முடியாது  - திருவள்ளுவர்

நிழல் போன்றது செல்வம். இளைப்பாற நம் நிழல் நமக்கு உதவாது  - திருமூலர்

மலை போன்ற செல்வம் சேர்த்தாலும் அதனால்  இறக்கும் போது அணு அளவும் பயன்  இல்லை. - சித்தர் பாடல்கள்

இன்னும் பல சான்றோர்களும் செல்வத்தின் நிலையாமையை பலவாறு விளக்குகிறார்கள்.  நாடக கூட்டம் போல் என்று வள்ளுவரின் நகைச்சுவை உணர்வும் , நம் நிழல் நமக்கு உதவாது என்ற திருமூலரின் ஆழ்ந்த கருத்துக்களையும் சற்று சிந்தித்தால் , செல்வத்தின் நிலையாமையை அறிந்து அதை விட  மேன்மையான குறிக்கோள்களை அடையாளம்.


குறிப்பு - மேலும் படிக்க

ஆடிய ஆட்டம் என்ன பாடல் - பாத காணிக்கை
 
நாலடியார் - செல்வம் நிலையாமை - பத்து பாடல்கள் - Tamilvu.org

குறள்திறன் - குறள் விளக்க வலைத்தளம்
 











               
     



.
ஆக்கம்
Thamizhsuvadi Team

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி