15 Aug 2021

சினம்


ஔவையார்

ஆறுவது சினம்

                                                                         ஔவையார்

இந்த ஆத்திச்சூடி அனைவரும் அறிந்த ஒன்றே. சினம் காலம் செல்ல செல்ல ஆறும்.  காலம் செல்ல செல்ல  எவ்வித கோவமும் குறைந்துவிடும்.    கோவத்தின் தன்மையை அளவீடாய் வைத்து மனிதர்களின் தரத்தை எவ்வாறு  நிர்ணயிக்கலாம்  என்று ஔவையாரின் மற்றொரு பாடல் இங்கே.

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

                                                                        ஔவையார் 
 மனிதர்களை கோவத்தின் தன்மையில் வைகைப்படுத்த முயன்றால்  மூன்று வகையாக பிரிக்கலாம்.  அந்த அளவுகோல்  வந்த கோவம் எவ்வளவு விரைவாக  மறைகிறது என்பதேயாகும்.

1. சான்றோர்களின் வெகுளியானது  ஆற்றிலிட்ட அம்பு போன்றது.  எய்த அம்பு நீரினுள் எவ்வளவு விரைவாக சென்று மறையுமோ அதைப்போன்று சான்றோர்களின் சினமானது வந்த நொடியிலே மறையும். மேலும் அம்பு சென்றதற்கான தடயமும் தெரியாது. சான்றோர்களின் வெகுளி (கோவம்) வந்த வேகத்திலேயே மறையும். அவர்களிடம் அந்த கோவம் தங்காது. சிறிதுநேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

2. பொதுவான மனிதர்களின் கோவம் தங்கத்தை பிளந்தாற்போன்றது. அவை மீண்டும் ஒன்றுசேர சிறிது வெப்பம் தேவைப்படும். சூடேற்றினால் மீண்டும் ஒன்றாகிவிடும்.  பெரும்பாலான மனிதர்களின் கோவம் இவ்வாறே அமையும்    

3. கீழ்மக்களின் சினமானது பிளந்த கல்லை போன்றது. ஒருமுறை கோவம் வந்துவிட்டால் அவர்களிடம் மீண்டும் உறவுகொள்ள முடியாது. உளியால் அடித்த பாறாங்கல் இரண்டாய் உடைந்தது போல மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பாது.  இத்தகையர்வர்களுடன் சண்டை ஏற்பட்டால் வாழ்நாள் முழுதும் வஞ்சம் கொள்வார்கள். 

இதில் உள்ள நுணுக்கம் என்னவென்றால் - சான்றோர்களின் கோபம் நீர் மேற்பரப்பில் அம்பு உருவாக்கும் தாக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது அம்பு கூர்மையானது (சான்றோர்களின் கோபம் கூர்மையானது - சரியான காரணங்களுக்காகவே வரும். வந்து சென்ற பின்னர் எந்த தடயமும் இருக்காது    - அம்பு சென்ற இடத்தை நீர் மறைத்தது போன்று சுவடுயில்லாமல் போகும் ).  

திருவள்ளுவர்
 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

                                                                          திருவள்ளுவர்

இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தின் ஒன்பதாவது குரல். குணம் என்னும் குன்றேறி நின்றார் என்பது துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை  ஆகிய நற்குணங்களின் குன்றின்கண் நின்றவர் ( பரிமேலழகர் உரை).  
எல்லாவற்றையும் துறந்து, எல்லாவற்றையும் அறிந்து எதன்மீதும் ஆசையில்லாமல் இருக்கும் துறவிக்கும் கோவத்தை அடக்குதல் முடியாத காரியம். ஆனால் அவர்களின் கோவம் வந்த வேகத்திலேயே மறையும். கணமேயும் என்பது முற்றும் உணர்தவர்களின் கோவம் கண நேரம்தான் என்றாலும் அதை வராமல் தடுக்க இயலாது.  

துறவிகளின் கோவம் கணப்பொழுதுதான் இருக்கும் ஏனெனில் கோவம் வந்த கணத்திலேயே அவர்களின் மெய்யுணர்வு அதை அழித்துவிடும் (வராமல் தவிர்க்க இயலாது ஆனால் வந்தால் மறுகணமே மாறிவிடும்). இதனால்தான் என்னவோ, சாபமிட்ட மறுகணமே சாபவிமோட்சணமும் சொல்லிவிடுகிறார்கள் முனிவர்கள்.

நாலடியார்

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

                                                                      நாலடியார்

கீழ்மக்களுடைய சினமானது நெடுங் காலமானாலும் ஒர் அழிவு காலம் இல்லாமல் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும். சான்றோர்களின் சினமானது, பிறரால் தணிவிக்க  வேண்டாமல் நெருப்பினிலிருந்து இறக்கி வைத்த வெண்ணீரைப்போல் தானே சிறிது நேரத்தில் வெப்பம் அடங்குவதுபோல்  கோவம் தானாய்  தணிந்துவிடும் .
 
பாரதியார்

நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை;

                                               பாரதியார்

நாணம், கவலை, சினம், அச்சம், பயம், வேட்கை - இவையனைத்தையும் அழித்துவிட்டால் மரணத்தையும் வென்றுவிடலாம். முதலில் கோவத்தை அழித்துவிடு மற்றவற்றை பிறகு சொல்கிறேன் என்கிறார். அதன் பொருள் கோவத்தை எவராலும் அழிக்க முடியாது; அவ்வாறு முடியுமானால் அவர் மரணத்தை வென்றவர் என்கிறார்
ஆக்கம்
Ashwin, Ram, & Smruthi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி